பேரிடர் கால முன்னெச்சரிக்கை குறித்தும் விழிப்புணர்வு
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும், பேரிடர் கால முன்னெச்சரிக்கை குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும், பேரிடர் கால முன்னெச்சரிக்கை குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பது எப்படி? தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் தண்ணீரில் மூழ்காமல் தப்பித்துக் கொள்வது எப்படி என்பது தொடர்பான செய்முறை விளக்கத்துடன் ஒத்திகை செய்து காட்டப்பட்டது.
அதேபோல் தீ விபத்து ஏற்பட்டால் முதலில் தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளித்தனர்.
முசிறி-திருவெறும்பூர்
முசிறி கைகாட்டி அருகே விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது பற்றி, தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த நடைமுறைகள் பற்றிய துண்டு பிரசுரத்தை வழங்கினர்.
திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு தீயணைப்பு துறை சார்பில் திருவெறும்பூர் பஸ் நிலையத்தில் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். நவல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும், ராக்கெட் போன்ற வானவெடிகளை குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் வெடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
லால்குடி
லால்குடி அருகே உள்ள கப்ரியல்புரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் லால்குடி தீயணைப்புத் துைற சார்பில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதில், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல் வாளாடி, பச்சாம்பேட்டை, பூவாளூர், பின்னவாசல் பஸ் நிலைய பகுதிகளில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.