பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திண்டுக்கல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, பள்ளி பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்களை பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் போதை பழக்கத்துக்கும் அடிமையாக கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். பள்ளி வளாகத்தில் யாரேனும் போதைப்பொருட்களை பயன்படுத்தினாலோ, வெளிநபர்கள் போதைப்பொருட்களை விற்பதற்காக பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்தாலோ உடனே ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றார். இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் சுசீந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, போலீசார், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.