கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளில் நடந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே போலீசார் பேசுகையில், இக்கால கட்டத்தில் சமுதாயத்தில் நம்மை அறிமுகப்படுத்தி கொள்ள ஒரு கருவி என்றால் அது கல்வி மட்டும்தான் என்பதை நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இன்று அனைத்து துறைகளிலும் பணிபுரிய கல்வி மட்டுமே அடிப்படை தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வியால் மேன்மை அடைந்தவரை மட்டுமே இந்த சமுதாயம் மதிக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி பயில ஏதுவான வயது இளமை பருவம் மட்டுமே, இந்த பருவத்தில் நீங்கள் உங்கள் கவனத்தை கல்வியில் செலுத்தினால், நாளை சமுதாயத்தில் நீங்கள் ஒரு முக்கியமான பணியில் உயர் அதிகாரியாக பணிபுரிவீர்கள். எதிர்காலத்தில் நாம் என்னவாக ஆக வேண்டும் என்பதை இன்றே திட்டமிடுங்கள். உங்கள் எதிர்கால கனவினை அடைய இன்றில் இருந்து முயற்சி செய்யுங்கள். எதிர்காலத்தில் கட்டாயம் உங்கள் கனவிற்கு உயிர் கொடுக்கலாம், என்றனர். மேலும் போலீசார் ஒவ்வொரு ேபாலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.