கூடலூரில் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்


கூடலூரில் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:21+05:30)

கூடலூரில் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் போக்சோ சட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு முகாம்

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் கூடலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, ஆல் தி சில்ட்ரன் அமைப்பு ஆகியவை சார்பில் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய மாணவர்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜார்ஜ் தலைமை தாங்கினார்.

ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கினைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார். கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுசிலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் அதிகபட்ச போக்சோ வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு இன்மையும் ஒரு காரணம் ஆகும். இச்சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு உட்பட்டவருக்கு ஏற்படும் பாலியல் சார்ந்த தொல்லைகள் அனைத்தும் அடங்கும். 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் எந்த வகையிலும் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாலியல் வகையான துன்புறுத்தல்கள் ஈடுபடும் பட்சத்தில் தவறு செய்தவர் மீது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இளம் வயதில் காதல் என்கிற பெயரில் 18 வயதிற்கு உட்பட்ட ஒரு பெண்ணையோ 21 வயதுக்குட்பட்ட ஒரு ஆணையோ திருமணம் செய்யும் பட்சத்தில் இச் சட்டத்தின் மூலம் குற்றமாகும். இளம் வயது திருமணம் செய்து வைத்தால் பெற்றோருக்கும் அதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய அனைவருக்கும் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். அதுபோல சைபர் குற்றங்களான ஆபாச படங்கள் அனுப்புதல், பதிவிறக்கம் செய்தல், மற்றவர்களை தவறாக சித்தரித்தல் போன்றவையும் குற்றமாக கருதப்படும். மாணவர்கள் போதை பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். சிறுவயதில் மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றது. வழக்குகள் பதியும் போது வருங்காலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும். எனவே மாணவ பருவத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நோய் எதிர்ப்பு சக்தி

கூடலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட உதவி அலுவலர் பாரதிராஜா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. இவற்றை போக்க செப்டம்பர் மாதம் விழிப்புணர்வு ஏற்படுத்த படுகிறது. ஊட்டசத்துக்கு சிறு தானிய உணவுகளை தினசரி சேர்த்து கொள்வது அவசியம். ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகளை தவிர்க்க ஊட்டச்சத்து உணவுகள் எடுப்பது அவசியம் என்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறும்போது,

ஊட்டச்சத்துகளை உணவுகளில் இருந்தே பெற முடியும். நமது உடலுக்கு தேவையான விட்டமின்கள் கிடைப்பது இல்லை. அரசே பாமாலின், உப்பு போன்றவற்றில் விட்டமின் மற்றும் அயோடின் சத்துகளை சேர்த்து நியாய விலை கடைகளில் வழங்குகிறது. பால், கோதுமை, சமையல் எண்ணெய் போன்றவற்றிலும் ஊட்டசத்துகள் சேர்த்து வழங்க அரசு அனுமதித்துள்ளது. எண்ணெய், உப்பு, காரம். போன்றவை அளவோடு எடுத்துக்கொண்டால் வருங்காலத்தில் நோய் தாக்கம் இன்றி ஆரோக்கியமாக வாழலாம். தினசரி உடற்பயிற்சியும் யோகா போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியளர்கள், காவல் துறையினர், கல்லூரி மாணவர்கள், தொழிற் பயிற்சிமைய மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story