இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
விவசாயிகள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது
பொறையாறு:
பொறையாறு அருகே சங்கரன்பந்தலில், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பில் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. முகாமிற்கு நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சங்கர் ராஜா, மயிலாடுதுறை மேற்பார்வையாளர் பி.எம். பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வேளான் உழவர் நல துறையின் நல திட்டங்களையும், மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டம் பற்றியும் விற்பனை கூட வசதிகள் இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்று அதிக லாபம் ஈட்டுவது பற்றியும் திருப்பூண்டி மேற்பார்வையாளரும் நாகை விற்பனை குழு அலுவலர் சங்க தலைவர் தட்ணாமூர்த்தி விளக்கி கூறினார். முகாமில் சங்கரன்பந்தல், ஹரிஹரன்கூடல், இலுப்பூர், புத்தகரம், நல்லத்தூர் ஆகிய சுற்றுவட்டாரத்தில் இருந்து பல விவசாயிகளும், கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் முத்துகுமரன், அகோரமூர்த்தி, மதியழகன் ஆகியோர் விவசாயிகளின் இல்லம் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.