சதுப்பு நில பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டி
சதுப்பு நில பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டி
ஊட்டி
உலக சதுப்பு நில தினமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி வன கோட்டம் சார்பில் ஊட்டி அரசு கலை கல்லூரியில் கல்லூரி சூழல் சங்க மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நேற்று நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் எபினேசர் முன்னிலை வகித்தார். நீலகிரி வன கோட்ட தலைமையிட உதவி வன பாதுகாவலர் தேவராஜ் போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நமது சுற்றுச்சூழல் அமைப்பின் குறிப்பிடத்தக்க பகுதி ஈரநிலங்களை உள்ளடக்கியது. ஏராளமான வலசை பறவைகள் மற்றும் இனங்களின் தாயகமாகவும் சதுப்பு நிலங்கள் உள்ளன. தற்போது கால கட்டத்தில் பல்வேறு காரணங்களால் சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே சதுப்பு நிலங்களை காப்பாற்றுவது மனிதர்களின் முக்கிய கடமையாகும். ஈர நிலங்களில் தங்கி இருந்து எவ்வளவு பறவைகள் வாழ்கின்றன என்பதை குறிப்பதே ராம்சார் தளம் ஆகும். இவை வெளிநாடு பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. தமிழகத்தில் 4 ராம்சார் தளங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதன்பின்னர் கல்லூரி சூழல் சங்க மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ஈரநில பாதுகாப்பு குறித்த கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் சூழல் சங்க ஒருங்கிணைப்பாளர் மோகனகிருஷ்ணன், கல்லூரி சூழல் சங்க இணை ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், வனச்சரகர்கள் ராம் பிரகாஷ், ராஜாகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.