விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விருதுநகரில் நடந்தது.
விருதுநகரில் மாவட்ட நிர்வாகமும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையும் இணைந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தினர். விருதுநகர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். மருத்துவக் கல்லூரியில் தொடங்கி 10 கி.மீ. தூரம் இந்த போட்டி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எவரெஸ்ட் சிகரம் ஏறிய முத்தமிழ்செல்வியும் கலந்து கொண்டார். போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் தந்தையுடன் கலந்து கொண்டனர். முதல் பரிசான ரூ.30 ஆயிரத்தை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி துர்கா தேவியும், அவரது தந்தை முருகேசனும் பெற்றனர். 2-வது பரிசான ரூ.20 ஆயிரத்தை ராஜபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அருணாவும், அவரது தந்தை பெரியசாமியும் பெற்றனர். 3-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை பெரிய பேராலியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி ஈஸ்வரியும், அவரது தந்தை மணிமாறனும் பெற்றனர். ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் 5 பேருக்கு வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.