போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
விழிப்புணர்வு ஊர்வலம்
கரூரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்த கருத்தரங்கில் போதைப்பொருள் தடுப்பு குறித்து நடந்த கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்
குளித்தலை
குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார். குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குளித்தலை அரசு கலைக்கல்லூரியிலும் விழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நொய்யல்
தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் துணை போலீஸ ்சூப்பிரண்டு கதிர்வேல் தலைமை தாங்கினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடந்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புகழூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வேலாயுதம்பாளையம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பின்னர் பள்ளி வளாகத்தில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
க.பரமத்தி
க.பரமத்தி போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊ்ாவலம் நடைபெற்றது. ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தொடங்கி வைத்தார். க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அங்கயர்கன்னி தலைமை தாங்கினார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நடந்தது.