புதிய தொழில் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்:தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது


புதிய தொழில் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்:தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதிய தொழில் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர்கள் பயன்பெறும் வகையில் 2023-24-ம் ஆண்டில் 'அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சேம்பியன்ஸ் திட்டம்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். நேரடி வேளாண் தொழில் தவிர்த்து உணவு பதப்படுத்தும் தொழில், தென்னை நார் பொருட்கள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தயாரித்தல், ஹாலோ பிளாக், சாலிட் பிளாக் உற்பத்தி, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், பல்பொருள் அங்காடி, வணிகப் பொருட்கள் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை, பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி வாங்குதல் உள்ளிட்ட தொழில் தொடங்கவும் கடனுதவி வழங்கப்படும்.

ஏற்கனவே செயல்படும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்கும் கடனுதவி வழங்கப்படும். இதற்கு கல்வித்தகுதி எதுவும் இல்லை. மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதம், அதிகபட்சம் ரூ.1½ கோடி வழங்கப்படும். வங்கக் கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்துபவர்களுக்கு 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story