திருட்டு சம்பவங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்
போந்தை கிராமத்தில் திருட்டு சம்பவங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலந்துகொண்டார்.
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த போந்தை ஊராட்சியில் குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு குற்றங்களை தடுப்பதற்கு உண்டான வழிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில் வீட்டின் முன்பக்கம், பின்பக்கம் கதவுகளுக்கு விலை உயர்ந்த பூட்டு பயன்படுத்த வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பூட்டப்பட்ட வீடுகளில் நகைகள் மற்றும் பணத்தை வைக்காமல் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வேண்டும்.
வெளியூர்களுக்கு செல்லும் போது பக்கத்து வீடுகளில் சொல்லிவிட்டு செல்ல வேண்டும். இரவு நேரங்களில் முன்பக்கம், பின்பக்கம் மின்சார விளக்குகளை எரியவிட வேண்டும். வீட்டின் முன்பும், பின்புறமும் செடிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திருட்டை தடுக்க எச்சரிக்கை மணியினை பொருத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட ஆலோசனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ,ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராஜசேகரன், துணைத்தலைவர் சிவகாமி ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.