யானை முகமூடி அணிந்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
மசினகுடியில் உலக யானைகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவர்கள் யானை முகமூடி அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கூடலூர்,
மசினகுடியில் உலக யானைகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவர்கள் யானை முகமூடி அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
யானைகள் தினம்
ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று உலக யானைகள் தினத்தை ஒட்டி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி பகுதியில் வனத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் யானைகள் தினத்தை கொண்டாடினர். மசினகுடி அருகே பொக்காபுரம் அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவ-மாணவிகள் யானைகளின் முகத்தோற்றத்தை கொண்ட முகமூடிகளை முகத்தில் அணிந்தபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து வனப்பகுதியில் எங்களையும் வாழவிடுங்கள் என கோஷம் எழுப்பினர். அப்போது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கலாவதி உள்பட ஆசிரியர்கள், பொதுமக்கள் யானையை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் சிங்காரா வனத்துறை சார்பில், வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையில் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது மசினகுடி பெட்ரோல் பங்க் தொடங்கி வன அலுவலகம் வரை யானையை பாதுகாப்போம் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செயல்முறை விளக்கம்
இதில் மசினகுடி பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக யானைகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனத்துறையினர், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பின்னர் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, வனங்களை பாதுகாக்கும் பணியில் காட்டு யானைகளின் பங்கு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனத்துறையினர், பாகன்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.