விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
கொடைக்கானல் வனத்துறை சார்பில் ‘மனித-வன உயிரின மோதல்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, நடைபெற்றது.
கொடைக்கானல் வனத்துறை சார்பில் 'மனித-வன உயிரின மோதல்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் நடைபெற்றது. அப்போது, தனியார் தோட்டங்களில் அமைக்கப்படும் மின்சார வேலிகளால் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. வெடி வெடித்தல், தீப்பந்தத்துடன் விரட்டுதல் உள்ளிட்ட செயல்களால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்பட்டு, மனித மோதல் ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், மரங்களை அழிப்பதனால் தமிழ்நாட்டில் மழை அளவு குறைந்து வருகிறது. எனவே மரங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பறை இசை வாசித்தும், கரகாட்டம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. மேலும் சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்க்கும்போது தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். அருகில் சென்று 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சியில் வனவர்கள் முத்துராமலிங்கம், அழகுராஜா, ஜெயசுந்தர் உள்பட வனத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் பழனி வனத்துறை சார்பில், மனித-வனஉயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, பாலாறு மற்றும் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. இதற்கு வனச்சரகர் பழனிக்குமார் தலைமை தாங்கினார். வனவர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். பறை இசை, கரகாட்டம், நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சி மூலம் வனஉயிரின பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கலைநிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.