மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்
மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் கலெக்டர் அமர்குஷ்வாஹா கேக் வெட்டி விழிப்புணர்வு ஊர்வலத்தையும் தொடங்கிவைத்தார்.
மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் கலெக்டர் அமர்குஷ்வாஹா கேக் வெட்டி விழிப்புணர்வு ஊர்வலத்தையும் தொடங்கிவைத்தார்.
கேக் வெட்டினார்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மனநல நாளையொட்டி கலெக்டர் அமர்குஷ்வாஹா, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் கேக்வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
அக்டோபர் 10-ந் தேதி உலக மனநல தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் நிறைய பேருக்கு உளவியல் பிரச்சினைகள் உள்ளன. இந்த சமுதாயத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதற்காக உலகம் முழுவதும் உலக மனநல தினம் கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் உதவும் உள்ளங்கள், எஸ்.ஆர்.டி.பி.எஸ். உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். மேலும் இன்று உலக வீடு அற்றோர் தினம் ஆகும். வீடு இல்லாதவர்களை கணக்கு எடுத்து வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
அதனை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 130 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் வழியாக சென்று உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் முடிவடைந்தது.
நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் ரமேஷ், மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.