தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் சிதம்பரம் பகுதிகளில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மங்கலம்பேட்டை அருகே விஜயமாநகரம் கிராமத்தில் உள்ள புது விளான்குளம் அரசு உதவி பெரும் நடுநிலை பள்ளியில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது? தீ விபத்தில் யாரேனும் சிக்கிக்கொண்டால் அவர்களை எப்படி மீட்பது? முதலுதவி சிகிச்சை எப்படி அளிப்பது? என்பது குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனா். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விருத்தாசலம் தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் சங்கர், சிறப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

திட்டக்குடி

திட்டக்குடி தீயணைப்பு துறை சார்பில் பஸ் நிலையத்தில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு அளித்தனர்.

சிதம்பரம்

சிதம்பரம் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சிதம்பரம் பஸ் நிலையத்தில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீ விபத்து ஏற்படும் போது அதில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது? தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

தொடர்ந்து அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும், நகரின் முக்கிய இடங்களிலும் தீ விபத்து தடுப்பு குறித்து பயிற்சி அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இதில் சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

குமராட்சி

குமராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குமராட்சி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் முரளி தலைமையில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ விபத்து தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளித்து, பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இதில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் ஷகில், அருள், பாஸ்கரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மணிமாறன், பிரகாஷ்ராஜ் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story