ஊட்டுவாழ்மடத்தில் ரெயில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டுவாழ்மடத்தில் ரெயில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் ஊட்டுவாழ்மடம் அருகே ரெயில் பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்சந்த் கலந்து கொண்டு ரெயில் நிலையம் அருகே வசிக்கும் பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி சென்றவர்கள் இடைேய விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில் தண்டவாளம் அருகே விளையாடும் சிறுவர்கள் ரெயில் வரும் நேரங்களில் தண்டவாளத்தில் சிறுகற்கள், நாணயங்களை வரிசையாக வைத்து ரெயிலில் சிறுகற்கள் உடைந்து செல்வதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இதை விளையாட்டாக ஆபத்தை உணராமல் செய்கிறார்கள். சில இடங்களில் வாலிபர்கள் சிறுகற்களை ரெயில் செல்லும் போது வீசுகின்றனர். இந்த கற்கள் பயணிகள் மீது பட்டு காயங்கள் ஏற்படுகிறது. இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவி மைய எண் 139 யை தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். உடனே அந்தந்த பகுதியில் உள்ள ரெயில்வே அதிகாரிகள் சம்பவ பகுதிகளுக்கு சென்று தீர்வு காண்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.