விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

ராகுல்காந்தி பாதயாத்திரையையொட்டி விழிப்புணர்வு பேரணி- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்

திருநெல்வேலி

இட்டமொழி:

அகிலஇந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., வருகிற 7-ந் தேதி தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாத யாத்திரையை தொடங்குகிறார். தொடர்ந்து 150 நாட்கள், சுமார் 3,500 கி.மீ. தொலைவு பயணித்து, காஷ்மீரை சென்றடைகிறார்.

இதுபற்றிய விழிப்புணர்வை தமிழக மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் 706 கி.மீ. தொலைவுக்கு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த பேரணியை தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். செப்டம்பர் 7-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த பேரணி நடைபெறுகிறது.

சென்னையில் இருந்து புறப்படும் மோட்டார் சைக்கிள் பேரணி, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி வழியாக கடலூரை சென்றடைகிறது. பேரணியில் கலந்து கொள்பவர்கள் அன்று இரவு கடலூரில் தங்கி ஓய்வு எடுப்பார்கள்.

நாளை (செவ்வாய்க்கிழமை) சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி வழியாக நெல்லையை வந்தடைகிறது. அன்று இரவு நெல்லையில் ஓய்வெடுக்கிறார்கள்.

7-ந் தேதி, நெல்லையில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி வழியாக கன்னியாகுமரியை சென்றடைகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story