விழிப்புணர்வு பேரணி
திருச்சுழியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சுழி,
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தகத்திருவிழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டியின் அறிவுறுத்தலின்படி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இந்த விழிப்புணர்வு பேரணியை வட்டாட்சியர் பாண்டிசங்கர் ராஜா மற்றும் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு திருச்சுழி துணை சூப்பிரண்டு அலுவலகம், மெயின் பஜார், மதுரை சாலை, நடு பஜார் வழியாக சென்று போலீஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது.
மேலும் புத்தகக் கண்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கு இருந்த கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் மண்டல துணை வட்டாட்சியர் சரவணகுமார், திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர், திருச்சுழி சப்- இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.