விழிப்புணர்வு பேரணி
சுரண்டை அருகே சுப்பையாபுரம் கிராமத்தில் உலக கழிப்பறை விழிப்புணர்வு தின பேரணி நடந்தது.
சுரண்டை:
சுரண்டை அருகே குலையநேரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுப்பையாபுரம் கிராமத்தில் உலக கழிப்பறை விழிப்புணர்வு தின பேரணி நடந்தது. குலையநேரி கிராம பஞ்சாயத்து தலைவர் சீதா பாலமுருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பொன்மாரி, பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணசாமி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆண்டாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்பையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். பொது இடங்களில் சுகாதாரத்தை பேணவும், கழிவுநீர் தேங்காமல் பாதுகாப்பாக அகற்றவும், நெகிழி பொருட்களை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரம் குறித்து கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் லிங்கசாமி, மாணிக்கசெல்வி, பள்ளி கல்வியாளர் துரைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் பாலமுருகன் நன்றி கூறினார்.