பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி


பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
x

பொருநை இலக்கிய திருவிழாவை முன்னிட்டு 5 நிலங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

பொருநை இலக்கிய திருவிழாவை முன்னிட்டு 5 நிலங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

நெல்லை மாவட்டத்தில் பொருநை இலக்கிய திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 5 நிலங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

பொருநை இலக்கிய திருவிழா

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு பேசும்போது கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் வருகிற 26, 27-ந் தேதிகளில் பொருநை இலக்கிய திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம், நூற்றாண்டு மண்டபம், மேற்கு கோட்டைவாசல், வ.உ.சி. மைதானம் மற்றும் பி.பி.எல். திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தனித்தனி அரங்குகளாக அமைத்து நடைபெற உள்ளது.

ஒத்துழைப்பு

இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்களை குறிக்கும் வகையிலான விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தப் பேரணி வ.உ.சி. மைதானத்தில் இருந்து தொடங்கி முருகன்குறிச்சி வாய்க்கால் பாலம் வழியாக சித்த மருத்துவக்கல்லூரி, மேடை காவல் நிலையம் வழியாக வ.உ.சி. மைதானத்திற்கு வந்தடைந்தது. பொதுமக்கள் அனைவரும் புத்தக திருவிழாவுக்கு வந்தது போல பொருநை இலக்கிய திருவிழாவுக்கு வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன், பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், தாசில்தார்கள் ஆனந்த பிரகாஷ் (பாளையங்கோட்டை) செல்வம் (பேரிடர் மேலாண்மை) மற்றும் அரசு அலுவலர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாம்

முன்னதாக நெல்லை மாநகராட்சி பொது சுகாதார பிரிவு சார்பில் பாளையங்கோட்டை மேரி ஆர்டன் நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி 9-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கான வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

முகாமை, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார். முகாமில் மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி, உதவி ஆணையாளர் (பொறுப்பு) டிட்டோ, மாநகர் நல அலுவலர் சரோஜா, மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ரஞ்சித்குமார், டாக்டர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை உணவு திட்டம்

நெல்லை மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேயர் சரவணன் பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைன் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் ராமசாமி, சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் அந்தோணி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story