மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 191 அரசு பள்ளிகளில் 2023-2024-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பேரணிக்கு 3 வாகனங்கள் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள், எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, மன்ற செயல்பாடுகள், காலை உணவு, சத்தான உணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல், அரசு பள்ளிகளில் தரமான இலவசக்கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும்வண்ணம் விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அரசு பள்ளிகளில் பயின்றால் கிடைக்கும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் தனவேல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் நிறைவடைந்தது.