பழங்குடியின கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


பழங்குடியின கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:17:01+05:30)

குழந்தை திருமண தடுப்பு, போக்சோ சட்டம் குறித்து பழங்குடியின கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

நீலகிரி

ஊட்டி

குழந்தை திருமண தடுப்பு, போக்சோ சட்டம் குறித்து பழங்குடியின கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில், வளர்ச்சி மற்றும் திட்ட பணிகளின் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை மூலம் இயற்கை விவசாயம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளை மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மனுக்கள் மீது தனி கவனம்

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து கண்காணிப்பதோடு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இது தவிர குப்பைகள் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இல்லம் தேடி கல்வி மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.

அரசு திட்டங்கள்

பழங்குடியின கிராமங்களில் குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் அவர்களிடம், அரசு திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி(ஊட்டி), பூஷணகுமார்(குன்னூர்), முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்(பொ) ஷிபிலாமேரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை பகவத்சிங், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story