குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
திருவெண்காடு:
சீர்காழி ஒன்றிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார தொடக்கக்கல்வி அலுவலர் பூங்குழலி, வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ராஜமோகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையர் இளங்கோவன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கூறுகையில், ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் திருமணம், தொழிலாளர் முறை ஒழித்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வை பலதுறை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், தொழிலாளர் ஆய்வாளர் இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி முத்துக்குமரன், சுப்பரவேல், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன் நன்றி கூறினார்.