குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
குழந்தை திருமணத்தை தடுக்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இணை இயக்குனர் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. இதில் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும், அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவ கால மரணங்கள் ஏற்படாமல் தடுப்பது, ஆண், பெண் பாலினம் சரிசமமாக இருக்க மேற்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பச்சிளம் குழந்தை சிகிச்சை பராமரிப்பு குறித்து மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து விளக்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
இளம் வயதில் குழந்தை பெறுவதால் பிரசவ கால இறப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் 18 வயதிற்கு முன்பே பெண்களுக்கு திருமணம் செய்து கர்ப்பம் ஆகுவதே ஆகும். அதை பதிவு செய்ய அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை. இளம்வயது பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி கிடையாது என்பதால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். அங்கு அவர்களுக்கு ஆபத்து காலத்தில் சிகிச்சை பெற முடியாததால் ஆபத்தான கட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். அதனால்தான் இறப்பு ஏற்படுகிறது.
இதனால் குழந்தை திருமணத்தை தடுக்க செவிலியர்கள் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 6 மாத கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்வதும் ஒரு காரணம் ஆகும். கருவில் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆண், பெண் சதவிகிதம் ஒரே அளவில் இருக்க வேண்டும். இது குறித்து தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பியூலா, மகப்பேறு மருத்துவர்கள், 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.