பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளிகொண்டா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார். பள்ளிகொண்டா அரசின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன், ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி வரவேற்று பேசினார்.
ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதாகைகளை ஏந்தி மாற்றுத்திறனாளிகளை, சமூகத்தால் ஒதுக்காமல் சாதாரண மக்கள் கல்வி பயில்வது போல் அவர்களும் பள்ளியில் சேர்ந்து கல்வி பயிலலாம், அதற்கான அனைத்து வசதிகளும் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி கற்பதற்கான உதவி தொகையும் வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து பள்ளிகொண்டா மேம்பாலத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது.
வேப்பங்கநேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பிலும் ஊர்வலம் நடந்தது. பள்ளியில் இருந்து தொடங்கி, பெட்ரோல் பங்க், கே.வி.குப்பம் பஸ் நிலையம் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்து அடைந்தது. மாவட்ட திட்ட அதிகாரி மகாலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நந்தகோபால், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார், ரூத்செல்வி, பள்ளி பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.