அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்


அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
x

நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி நேற்று அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்:

ஒன்றிய கவுன்சிலர்கள்

அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான பார்வதி, ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் மோனிஷா ஆகியோர் நேற்று பொதுமக்களுடன் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது ஒன்றிய வார்டு பகுதிகளில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக்கூறி ஆணையாளர் வெங்கட்ராமனிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

2022-2023-ம் ஆண்டு அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய 15-வது நிதி குழு மானிய பணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 15-வது நிதிக்குழு மானிய தொகை ரூ.1 கோடியே 15 லட்சத்து 98 ஆயிரத்து 880-யை 19 வார்டுகளுக்கும் பாகுபாடு இன்றி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

நிறுத்த வேண்டும்

ஆனால் ஒரு குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டும் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற வார்டுகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியவில்லை. அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் திட்டங்களை செயல்படுத்தாமல், குறைந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியை அனைத்து வார்டு பகுதிகளுக்கு சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதுவரை 15-வது நிதிக்குழு மானிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தர்ணா போராட்டம்

இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பார்வதி, மோனிஷா மற்றும் அவர்களுடன் வந்த பொதுமக்கள் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story