களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா நடந்தது.
களக்காடு:
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருக்கல்யாண விழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி காலையில் கோமதி அம்பாள் தவசு காட்சி இடம்பெற்றது. சிறப்பு அபிஷேகங்களுக்கு பின் கோமதி அம்பாள் தபசு கோலம் பூண்டு, வாகனத்தில் புறப்பட்டு, திருக்கல்யாண தெரு ஆற்றங்கரையில் உள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருளுளினார். பின்னர் மாலையில் சத்தியவாகீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகள் வழியாக திருக்கல்யாணத் தெருவிற்கு சென்றார். அங்கு தபசிருந்த அம்பாளுக்கு சுவாமி திருக்காட்சி அளித்தார். அம்பாள் சுவாமியை வலம் வந்தார்.
அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு தோள் மாலை மாற்றும் வைபவமும் நடத்தப்பட்டது. 3 முறை மாலைகள் மாற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. அதன் பின் சுவாமி-அம்பாள் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். கோவில் கொழு மண்டபத்தில் அம்பாளுக்கு திருத்தாலி அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்களான களக்காடு சேனை தலைவர் சமுதாயத்தினரும், கோவில் ஊழியர்களும் செய்திருந்தனர்.