பராமரிப்பின்றி பொலிவிழந்து வரும் ஆயுத கோபுரம்


பராமரிப்பின்றி பொலிவிழந்து வரும் ஆயுத கோபுரம்
x

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள ஆயுத கோபுரம் பராமரிப்பின்றி பொலிவிழந்து வருகிறது. இதை புனரமைக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள ஆயுத கோபுரம் பராமரிப்பின்றி பொலிவிழந்து வருகிறது. இதை புனரமைக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆயுத கோபுரம்

சோழர் கால ஆட்சியின் முடிவில் பாண்டியர்கள் படையெடுத்தனர். அப்போது பெரியகோவிலை தவிர அரண்மனைகள், குடியிருப்புகள் என தஞ்சை நகரம் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டது. பிற்காலத்தில் தஞ்சைக்கு வந்த நாயக்கர்கள் புதிதாக நகரை உருவாக்கி, மையப் பகுதியில் அரண்மனையை கட்டினர்.

உயரமான கோபுரங்கள், மாளிகைகள், தர்பார் கூடம் உள்பட அழகிய கட்டிட அமைப்புகளை கொண்ட இந்த அரண்மனை முழுவதும் செங்கல், கருங்கல், சுண்ணாம்பு, மரம் போன்ற பொருட்களை கொண்டு எழுப்பப்பட்டது என்பது தஞ்சை வரலாற்றின் அதிசயங்களுள் ஒன்று.

தற்போதுள்ள கலைக்கூட வளாகத்தில் 8 அடுக்குகளுடன் வானுயர்ந்து நிற்கும் ஆயுத கோபுரம் உள்ளது. இது இந்திரா மந்திரம் என்றும் அழைக்கப்பட்டது. தஞ்சை மீது எதிரிகள் படையெடுத்து வருகின்றனரா? என்பதை கண்காணிப்பதற்கும் இந்த ஆயுத கோபுரம் பயன்படுத்தப்பட்டது.

இந்த கோபுரத்தின் கீழ் படை வீரர்களுக்கான போர்க்கருவிகள் குவிக்கப்பட்டிருந்தன. எதிரிகள் படையெடுத்து வரும்போது ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஆயுத கோபுரத்துக்கும், மணிக் கோபுரத்துக்கும் இடையில் தர்பார் கூடமும் உள்ளது.

புதுப்பிப்பு

மராட்டியர்கள் படையெடுப்பின்போது விஜயராகவ நாயக்கர்கள் மரணமடைந்த பிறகு இந்திரா மந்திரத்தில் ராணிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பின்னர் வந்த மராட்டியர்கள் அரண்மனையை புதுப்பித்து பராமரித்து வந்தனர். அப்போது, இந்த இந்திரா மந்திரமும் பராமரிக்கப்பட்டது. மராட்டியர்கள் காலத்திலும் இந்திரா மந்திரத்தில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

பெயர் மாற்றம்

மராட்டியர்களுக்கு பிறகு வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்த இந்திரா மந்திரத்தில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. எனவே, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த கட்டிடத்துக்கு ஆயுத கோபுரம் என பெயர் மாறியதாக கூறப்படுகிறது. பிற்காலத்தில் இங்கிருந்த துப்பாக்கி குண்டுகள் திருச்சி ஆயுதப்படைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் உள்ளன.

அரண்மனை வளாகத்தில் உள்ள ஆயுத கோபுரம், மணிக் கோபுரம், தர்பார் கூடம், கலைக்கூடம் ஆகியவை அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகின்றன. ஆயுத கோபுரத்தின் முதல் அடுக்கில் வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய பழங்கால திமிங்கலத்தின் 92 அடி நீள எலும்புக்கூடு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கண்டறியப்பட்ட பழங்கால கற்சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்ப்பு

அரண்மனை வளாகத்தில் உள்ள மணிகோபுரம், கலைக்கூடம் சில ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்ததால், தற்போது பொலிவுடன் காணப்படுகிறது. ஆனால், மிக உயரமாக எல்லோரையும் கவரும் ஆயுத கோபுரம் புனரமைக்கப்படாமல் உள்ளது. பறவைகளின் எச்சம் மற்றும் மழையால் பாசி படர்ந்தும், செடிகள் முளைத்தும் பொலிவிழந்து காணப்படுகிறது.

தற்போது, தர்பார் கூடமும், சர்ஜா மாடியும் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதாகவும், வருங்காலத்தில் ஆயுத கோபுரம் சீரமைக்கப்படும் எனவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். பெரியகோவிலை மையப்படுத்தி தஞ்சைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பெரியகோவிலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் அரண்மனைக்கும் செல்கின்றனர். எனவே, அரண்மனைக்கும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க ஆயுத கோபுரத்தையும் புனரமைக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story