ஆயுதபூஜை தொடர் விடுமுறை: சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ், ரெயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ், ரெயில்களில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
சென்னை,
ஆயுதபூஜை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. ஆயுதபூஜை திங்கட்கிழமையும், விஜயதசமி செவ்வாய்க்கிழமையும் வருகிறது. அதற்கு முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்கள் என்பதால், மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது.
பொதுவாக ஆயுதபூஜை தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல விருப்பப்படுவார்கள். இதனால் பஸ்கள், ரெயில்களில் மக்கள் கூட்டம் ஏராளமாக இருக்கும்.
அந்த வகையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சாரை சாரையாக மக்கள் சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் பஸ்கள், ரெயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது.
மக்கள் கூட்டம்
ஆயுதபூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அதன்படி, சென்னையில் இருந்து தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பைபாஸ், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், கூடுதலாக 2 ஆயிரத்து 265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என கூறப்பட்டது.
அந்த வகையில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறி சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டு சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற 1,620 ஆம்னி பஸ்களில் சுமார் 65 ஆயிரம் பயணிகள் சென்றதாகவும் கூறப்படுகிறது.
முண்டியடித்து ஏறி பயணம்
இதேபோல், சிலர் தங்களுடைய சொந்த கார்களிலும் ஊருக்கு புறப்பட்டனர். இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்ததை பார்க்க முடிந்தது. சில இடங்களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை) சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளன.
பஸ்களை போல, சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்டிரலில் இருந்து ரெயில்கள் மூலமும் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். அதிலும் ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் முண்டியடித்து கொண்டு ஏறி, மூச்சுவிடகூட இடம் இல்லாமல் நெருக்கியபடி, எப்படியாவது ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் பயணித்ததையும் பார்க்க முடிந்தது.