அய்யனார், பாலையடி கருப்பண்ண சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம்
செம்பட்டிவிடுதி அருகே அய்யனார், பாலையடி கருப்பண்ண சுவாமி கோவிலில் மாசி மக தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அய்யனார் கோவில்
செம்பட்டிவிடுதி அருகே வாராப்பூரில் பிரசித்தி பெற்ற அய்யனார், பாலையடி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது.
கடந்த 11-ந் தேதி பில்லி சோறு எறியும் வினோத திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசி மக தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் வாராப்பூர் மற்றும் 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வீற்றிருக்க வாணவேடிக்கையுடன் மங்கள இசை முழங்க கோவிலை சுற்றி 4 வீதிகளிலும் தேர் பவனி வந்தது. விழாவில் மேள தாளங்கள் முழங்க வாணவெடிகள் அதிர ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். செம்பட்டிவிடுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.