பழனி முருகன் கோவிலில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
x

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்

கார்த்திகை மாதப்பிறப்பு

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தமிழ்மாத பிறப்பு, கிருத்திகை ஆகிய நாட்களில் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதேபோல் ஆண்டுதோறும் அய்யப்ப சீசன் காலத்தில் வெளியூரை சேர்ந்த அய்யப்ப பக்தர்களும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி நேற்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் குவிந்தனர்.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற பின்பு பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் அடிவாரம் கிரிவீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

மாலை அணிந்த பக்தர்கள்

இதேபோல் பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், அய்யப்பன் கோவில் ஆகிய இடங்களில் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

முன்னதாக அதிகாலையிலேயே குளித்து கருப்பு, நீல நிற வேட்டி, அணிந்து குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அந்தந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

சபரிமலை சீசனையொட்டி பழனி அடிவார பகுதியில் பேன்சி பொருட்கள், அலங்கார பொருட்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் களை கட்டியுள்ளது.


Next Story