மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்


மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
x

பெரம்பலூரில் ஏறத்தாழ 300 அய்யப்ப பக்தர்கள் மாலையிட்டு கார்த்திகை மாத விரதத்தை தொடங்கினர்.

பெரம்பலூர்

மாலை அணிந்து...

பெரம்பலூரில் தெப்பக்குளம் கிழக்குகரையில் உள்ள அய்யப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். இதனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே அய்யப்பசாமி கோவிலுக்கு வருகை தந்தனர். முதன்முதலில் கார்த்திகை மாலை அணிந்து ஒருமண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் கன்னிசாமி பக்தர்களுக்கும், ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் யாத்ரிகர்களுக்கும், அய்யப்பசேவா சங்க குருசாமிகள் சந்தனமாலை மற்றும் துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிவைத்து, விரதம் முடியும் வரை அய்யப்ப பக்தி சிரத்தையுடன் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஒரே நாளில் ஏறத்தாழ 300 அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

மண்டல பூஜை

கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு கோபூஜையும், அய்யப்பசாமிக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை பிரம்மபுரீஸ்வரர் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான அய்யப்ப குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர். 56-வது ஆண்டு மண்டல பூஜை மகாஉற்சவ விழா டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் (கார்த்திகை மாத இறுதியில்) நடைபெற உள்ளது. மண்டலபூஜை மகாஉற்சவ நிகழ்ச்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் உறுதிசெய்யப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story