மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கார்த்திகை மாதம் பிறந்தது
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். பின்னர் அவர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிப்பார்கள்.
அதன்படி நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அந்தந்த பகுதியில் உள்ள குருசாமிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர்.
அய்யப்ப பக்தர்கள் விரதம்
புதுக்கோட்டை சின்னப்பா நகர் அய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதேபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், தண்டாயுதபாணி கோவில், சீதாபதி விநாயகர் கோவில், குமரமலை பால தண்டாயுதபாணி கோவில், வரசக்தி விநாயகர் கோவில், பூங்காநகர் அய்யப்பன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், அய்யப்பனை வழிபட்டு கருப்பு மற்றும் காவி நிற வேட்டிகளை அணிந்து குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர். இதேபோல், நெம்மாலக்கோட்டை சித்திவிநாயகர் கோவில், கொத்தமங்கலம் வாழவந்த பிள்ளையார் கோவில், கீரனூர் அய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
கொடியேற்றம்
விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று காலை யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. அதன்பின்னர் சிவாச்சாரியார்கள் கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றினர். அய்யப்ப பக்தர்கள் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விராலிமலை அய்யப்ப சேவா சங்கம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.