அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
நெல்லையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
நெல்லையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
அய்யப்ப பக்தர்கள்
சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அவர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் கடும் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு சென்று ஜோதி தரிசனம் பார்ப்பது வழக்கம் ஆகும்.
இந்த ஆண்டு நேற்று கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் நேற்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் நீராடினார்கள். பின்னர் அங்குள்ள முருகன் கோவிலில் தரிசனம் செய்து, 18 ஆண்டுகளுக்கு மேல் சபரிமலை சென்று வந்த குருசாமிகளின் கையால் மாலை அணிந்து கொண்டனர். துளசி மணி மாலை, ருத்ராட்ச மாலைகளை அணிந்தனர்.
இதுதவிர வண்ணார்பேட்டை உள்பட தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் நேற்று அதிகாலை நேரத்தில் புனித நீராடினார்கள். பின்னர் அவர்கள் மூத்த பக்தர்கள் மூலம் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
நெல்லை டவுன் சுவாமி சன்னதி ரோட்டில் உள்ள அய்யப்ப தேவா சங்கத்தில் குருசாமி தனுஷ்கோடி தலைமையில் ஏராளமான பக்தர்கள் துளசிமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
இவர்கள் 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி கோவிலுக்கு செல்வார்கள். நடைபயணமாகவும், வாகனங்களிலும் சபரி மலைக்கு சென்று அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்து வருவார்கள்.
நெல்லையில்...
விரதம் தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா பயணத்தையும் தொடங்கி விட்டனர். திருச்செந்தூர், கன்னியாகுமரி, குற்றாலம் போன்ற ஸ்தலங்களுக்கு நேற்று வந்தனர். அவர்கள் நெல்லை வழியாக செல்லும் போது நெல்லையப்பர் கோவில் மற்றும் அல்வா கடைகளுக்கும் வந்து சென்றனர். இதனால் நெல்லை பஜார் பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் கூட்டத்தை அதிகளவு காண முடிந்தது.