பூத்துக்குலுங்கும் 'அசேலியா' மலர்கள்
பூத்துக்குலுங்கும் ‘அசேலியா’ மலர்கள்
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவர இனங்கள் வளரக்கூடிய இதமான காலநிலை நிலவுகிறது. நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் காட்டு சூரியகாந்தி, அசேலியா ஜபோனிகா உள்ளிட்ட மலர் விதைகள் கோத்தகிரி உள்பட மாவட்டம் முழுவதும் தூவப்பட்டன. தற்போது கட்டபெட்டு முதல் ரேலியா அணை வரை செல்லும் சாலையோரத்தில் ஊதா நிறத்தில் அசேலியா ஜபோனிகா மலர்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. இவை வாசமில்லாத மலராக இருந்தாலும், காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் இளஞ்சிவப்பு, ஊதா வண்ணத்தில் காட்சியளிக்கிறது. இந்த மலர்களை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். இந்த மலர்கள் சொகுசு பங்களாக்களில் அழகுக்காக தொட்டிகளிலும், வேலியாகவும் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதேபோன்று கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் காட்டு சூரியகாந்தி மலர்கள், சிவப்பு நிறத்தில் நெருப்பு போல காட்சியளிக்கும் செங்காந்தள் மற்றும் சேவல் கொண்டை மலர்களும் சீசன் காரணமாக அதிகளவில் பூத்துக்குலுங்கி வருகின்றன.