குமரியில் 25 இடங்களில் பா.ஜனதாவினர் போராட்டம்


குமரியில் 25 இடங்களில்  பா.ஜனதாவினர் போராட்டம்
x

போலீசார் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுப்பதாக குமரி மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் பா.ஜனதாவினர் "நீதி கேட்கும் போராட்டம்" நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

போலீசார் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுப்பதாக குமரி மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் பா.ஜனதாவினர் "நீதி கேட்கும் போராட்டம்" நடத்தினர்.

காங்கிரஸ்- பா.ஜனதா மோதல்

ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செட்டிகுளம் வரை பேரணியாக சென்றனர். அப்போது கலெக்டர் அலுவலக சந்திப்பு அருகே உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தின் முன்பு அமர்ந்து மோடிக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.

இதனால் காங்கிரசாருக்கும் பா.ஜனதா நிர்வாகிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதுதொடா்பாக பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 3 பேரையும், காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

மார்த்தாண்டம்

இந்த மோதல் சம்பவத்தில் மாவட்ட போலீசார் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினருக்கு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி கண்டனம் தெரிவித்து பா.ஜனதாவினர் மாவட்டம் முழுவதும் "நீதி கேட்கும் போராட்டம்' நடத்தினர். அதன்படி மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு நேற்று மாலையில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கிள்ளியூர் வடக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதா வடக்கு ஒன்றிய தலைவர் சதீஷ் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

குளச்சல்

குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் பா.ஜனதா நகர தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரன், பெருமாள், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் ஆகியோர் பேசினர். கவுன்சிலர்கள் சுரேஷ் குமார், செல்வகுமாரி, சுஜித்திரா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் ரெத்தினமணி நிறைவுரை ஆற்றினார். நகர பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

குழித்துறை

மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் கழுவன்திட்டையில் போராட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கினார். விஜயகுமார், சரவணவாஸ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாவட்ட பிரசாரபிரிவு செயலாளர் பிரேம்குமார், வக்கீல் பவுல்ராஜ், இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி, களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குழித்துறை நகர பா.ஜனதா சார்பில் குழித்துறை சந்திப்பில் நடந்த போராட்டத்திற்கு நகர தலைவர் சுமன் தலைமை தாங்கினார். குழித்துறை நகராட்சி கவுன்சிலர் ரத்தினமணி, பிஜு, மினி குமாரி, செல்வகுமாரி, மாவட்டச் செயலாளர் முருகன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் ராஜசேகர், அருமனை பேரூராட்சி முன்னாள் தலைவர் சுஜி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதுபோல் நாகர்கோவில், புதுக்கடை, நித்திரவிளை, அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, ஈத்தாமொழி, கொட்டாரம் உள்பட 25 இடங்களில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story