பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து கோதவாடி குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?


பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து கோதவாடி குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து கோதவாடி குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து கோதவாடி குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோதவாடி குளத்திற்கு தண்ணீர் திறப்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே 152 ஏக்கர் பரப்பளவில் கோதவாடிகுளம் உள்ளது. கிணத்துக்கடவு பகுதியில் சரிவர மழை பெய்யாததால் இந்தகுளத்தில் தண்ணீர் தேங்காமல் வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தன்னார்வ அமைப்புகள் குளத்தை சீரமைத்தனர். ஆனாலும் வடகிழக்கு பருவமழையின் போது இந்த குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. இதையடுத்து அந்த பகுதி விவசாயிகள், தன்னார்வலர்கள் பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் உபரி தண்ணீரை கோதவாடி குளத்திற்கு தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் மெட்டுவாவி, செட்டியக்காபாளையம் ஆகிய கிளைவாய்க்கால் மூலம் கோதவாடி குளத்திற்கு 3 வழிகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குளத்தில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோதவாடி குளம் நிறைந்ததால் குருநெல்லி பாளையம், கோதவாடி, கொண்டம்பட்டி, நல்லட்டிபாளையம் செட்டியக்கா பாளையம் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்தது. இதனால் இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது. மேலும் விவசாய பணிகளும் தீவிரமடைந்தன. 30 ஆண்டுகளுக்கு பிறகு கோதவாடி குளம் நிறைந்ததால் சுற்று வட்டார மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழக அரசு ஆணை பிறப்பிக்குமா?

இந்த நிலையில் தற்போது வெயில் வாட்டி வருவதால், கோதவாடி குளத்தில் தண்ணீர் குறைந்து குட்டைப்போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில நாட்களில் தண்ணீர் வற்றி, குளம் வறண்டு போகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து கோதவாடி குளத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

30 ஆண்டுகளுக்கு பிறகு கோதவாடி குளம் நிரம்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குளத்தில் தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் தற்போது கோடையின் காரணமாக வேகமாக குளத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது. குளம் தண்ணீர் இன்றி வறண்டால் நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே ஆண்டுதோறும் கோதவாடி குளத்திற்கு பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து உபரி தண்ணீரை திறந்துவிட நிரந்தரமாக தமிழக அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story