திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் புத்தாண்டில் பிறந்த 18 குழந்தைகள்
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் புத்தாண்டு தினமான நேற்று 18 குழந்தைகள் பிறந்தன.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் புத்தாண்டு தினமான நேற்று 18 குழந்தைகள் பிறந்தன.
ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டு என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே இளைஞர்கள், புதுமண தம்பதிகள், காதலர்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கி விடுவார்கள். மேலும் ஓட்டல்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.
அதன்படி திண்டுக்கல்லில், புத்தாண்டு தினமான நேற்று நள்ளிரவு வரை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு பட்டாசுகளை வெடித்து வாண வேடிக்கையையும் நிகழ்த்தினர். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த கொண்டாட்டம் அதிகாலை வரை நீடித்தது.
கோவில்களில் வழிபாடு
பின்னர் நகரில் உள்ள கோவில்களுக்கு சென்று புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமைய வேண்டும் என மனமுருகி வேண்டிக்கொண்டனர். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு, பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புத்தாண்டு கொண்டாட்டம், பரிசு பொருட்கள் ஆகியவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட எல்லையில்லா பூரிப்பை தரும் குழந்தை செல்வமும் இந்த புத்தாண்டில் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளது.
புத்தாண்டு பிறந்த நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 18 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 11 ஆண் குழந்தைகள், 7 பெண் குழந்தைகள் அடங்கும். குழந்தை செல்வத்தை புத்தாண்டு பரிசாக பெற்ற தம்பதியினர் நேற்று மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர். மேலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் இனிப்புகளை கொடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.