சேற்றில் சிக்கி குட்டி யானை சாவு


சேற்றில் சிக்கி குட்டி யானை சாவு
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:53 PM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழந்தது. அதன் உடலை வனத்துறையினரை எடுக்க விடாமல் தாய் யானை பாச போராட்டத்தில் ஈடுபட்டது.

நீலகிரி

கூடலூர்,

தேவர்சோலை அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழந்தது. அதன் உடலை வனத்துறையினரை எடுக்க விடாமல் தாய் யானை பாச போராட்டத்தில் ஈடுபட்டது.

குட்டி யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் தேவர்சோலை அருகே பாடந்தொரை வாச்சிக்கொல்லி சோமன் வயல் என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டமாக நின்று பிளிறி கொண்டிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது காட்டு யானைகளுக்கு இடையே குட்டி யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதனால் குட்டியின் உடலை எடுக்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால், காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியது. இதனால் வனத்துறையினர் திரும்பி ஓடி வந்தனர். பின்னர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், தாய் யானை அங்கிருந்து செல்லாமல் பாச போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரேத பரிசோதனை

இதைத்தொடர்ந்து பி.எம்.-2 காட்டு யானையை பிடிப்பதற்காக வந்த கும்கி யானைகள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் அதன் உதவியுடன் தாய் யானையை வனத்துறையினர் விரட்டினர். பின்னர் தாய் யானை அங்கிருந்து சென்று தொலைதூரத்தில் சோகத்துடன் நின்றிருந்தது. தொடர்ந்து வனத்துறையினர் குட்டி யானை இறந்து கிடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.அப்போது சேற்றில் சிக்கி 1 வயது ஆண் குட்டி யானை உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் வந்து குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதே பகுதியில் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தாய் காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story