2 வயது பெண் குழந்தை தாயாரிடம் ஒப்படைப்பு
தர்மபுரி பஸ் நிலையத்தில் விட்டு சென்ற 2 வயது பெண் குழந்தை தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
தர்மபுரி பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 வயது பெண் குழந்தையை ஒரு பெண் விட்டு சென்று விட்டார். தனியாக அழுது கொண்டிருந்த குழந்தையை போலீசார் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை பஸ் நிலையத்தில் விட்டு சென்ற பெண் குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண், மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய் என்று கூறி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் குழந்தை பிறந்த இடம், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருமாறு போலீசார் தெரிவித்தனர். இதனால் திரும்பிச் சென்ற அவர் குழந்தை தொடர்பான ஆவணங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவற்றை சரிபார்த்து போலீசார் அந்த குழந்தை அவருடையது என உறுதி செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக குழந்தையை அவர் பஸ் நிலையத்தில் விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அறிவுரை கூறி குழந்தையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.