பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கேரளாவில் மீட்பு


பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கேரளாவில் மீட்பு
x

24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார், பெண் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யூனிஸ் (வயது 28). கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை, கடந்த 27-ந் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். இதையடுத்து29-ந் தேதி திவ்யபாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அங்கு தொடர்ந்து தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திவ்யபாரதி தூங்கி கொண்டு இருந்தபோது, மர்மநபர்கள் குழந்தையை கடத்தி சென்றுவிட்டனர். தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் திரண்டு வந்த அவர்கள், ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதை அறிந்ததும், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு, உடனடியாக 6 தனிப்படைகளை அமைத்து, விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

இதற்கிடையில் குழந்தையை கடத்திய மர்மநபர்கள் ஆட்டோவில் தப்பி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அத்துடன் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது, குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்தி சென்ற 2 பெண்கள், கோவை உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறுவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட தேடுதலில் குழந்தையை கேரளாவில் மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திய ஒரு பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story