மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து பசுவை தாக்கிய புலி


மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து பசுவை தாக்கிய புலி
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிற்றாறு பகுதியில் மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து பசுவின் காலை கடித்து குதறிய புலியால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

சிற்றாறு பகுதியில் மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து பசுவின் காலை கடித்து குதறிய புலியால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

புலி அட்டகாசம்

குமரி மாவட்டம் சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்பில் மோகன்தாஸ் என்ற தொழிலாளியின் வீட்டின் அருகில் கட்டப்பட்டிருந்த ஆட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி அடித்து கொன்றதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் குடியிருப்பு பகுதியைச் சுற்றி சுமார் 10 இடங்களில் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் விசேஷ கண்காணிப்பு கேமராக்களை வைத்தனர். இதில் புலியின் உருவம் பதிவாகி உள்ளதா? என வனத்துறையினரும் கண்காணித்தனர்.

மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்தது

3-வது நாளாக நேற்று மாலை வரை புலி தொடர்பான காட்சிகள் கேமராக்களில் பதிவாகவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு திடீரென புலி சிற்றாறு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த பசுமாடு ஒன்றை கடித்து குதறியது. இதனால் பசுமாடு அலறியது.

சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து பார்த்த போது புலி பசுமாட்டை கடித்து குதறியபடி இருந்தது. உடனே பொதுமக்கள் அபய குரலை தொடர்ந்து எழுப்பியபடி இருந்தனர்.இந்த சத்தத்தை கேட்டு மிரண்டு போன புலி பசுமாட்டின் காலை மட்டும் கடித்து இழுத்தபடி அங்கிருந்து சென்று விட்டது. மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து புலி அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் சிற்றாறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


Next Story