பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ம் கல்வி ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes என்ற இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மேற்படி 2022-23-ம் நிதி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.1.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.