தூர்ந்து கிடக்கும் கால்வாய்களால் துர்நாற்றம்


தூர்ந்து கிடக்கும் கால்வாய்களால் துர்நாற்றம்
x

தூர்ந்து கிடக்கும் கால்வாய்களால் துர்நாற்றம் வீசுகிறது.

கடலூர்

கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் தினசரி ஒவ்வொரு வார்டுகளின் குறைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று (புதன்கிழமை) 43-வது வார்டில் உள்ள குறைகள் குறித்து பார்ப்போம்...

கொசுக்கள் உற்பத்தி

மாநகராட்சி 43-வது வார்டில் சீமான் தோட்டம் தெரு, நைனா சந்து, சுப்பன் சந்து, சின்னையன் தெரு, பெரி தெரு, வைத்திலிங்கம் தெரு, முத்துபசவப்பன் சந்து, பங்காரு தெரு, சோனகர் தெரு, சின்னக்கடை தெரு, பள்ளிவாசல் சந்து, பள்ளிவாசல் தெரு, முகமது நைனா சந்து, வைத்திலிங்கம் சந்து, சராங்கு தெரு, வீரபத்திரசாமி கோவில் தெரு, முத்து தெரு, முத்து சுபேதார் தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இந்த வார்டு பகுதிக்குள் நுழைந்தாலே கடும் துர்நாற்றம் தான் வீசுகிறது. அந்த அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதற்கு காரணம், அந்த வார்டில் உள்ள அனைத்து வீடுகளின் முன்புள்ள கழிவுநீர் கால்வாய்களும் பராமரிப்பின்றி முற்றிலும் தூர்ந்து போய் காணப்படுவதே ஆகும். இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி, தேங்கியே நிற்கிறது. மேலும் அந்த கழிவுநீரில் குப்பைகளும் கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில் இருந்து அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள்.

அடிப்படை வசதி இல்லாத பள்ளிகள்

இதேபோல் சீமான் தோட்டத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் இங்கு மாணவர்களுக்கென்று கழிவறை வசதி ஏதும் இல்லை. இதனால் அவர்கள் பள்ளி வளாகத்திலேயே திறந்தவெளியில் தான் இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். மேலும் போதுமான வகுப்பறை வசதிகளும் இல்லாததால் ஒரே வகுப்பறையில் தான் பல மாணவர்கள் அமர்ந்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதேபோல் அதன் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியிலும் போதிய கழிவறை வசதி இல்லை. இதனால் அங்கு படிக்கும் மாணவிகள் பள்ளி நேரத்தில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மாணவர்களின் சைக்கிள்களும் மரத்தடியிலும், திறந்தவெளியிலும் தான் நிற்கிறது. இதனால் அடிக்கடி பழுதாகி வருகின்றன. எனவே பள்ளிக்கூடத்தில் சைக்கிள் நிறுத்தும் இடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் வசதிக்காக உடனடியாக கழிவறை கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

கழிவுநீர் கால்வாய்

இதுகுறித்து அந்த வார்டில் வசிக்கும் கண்ணன் என்பவர் கூறுகையில், 43-வது வார்டில் உள்ள அனைத்து கால்வாய்களும் தூர்ந்து போய் கிடப்பதால், எங்கும் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கியே நிற்கிறது. இதில் மழைக்காலம் தொடங்கி விட்டால், கழிவுநீர் அனைத்தும் சாலையில் தான் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டி உள்ளது. மேலும் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் பகுதியாக எங்கள் வார்டு உள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அடிக்கடி அறிவுறுத்தி வரும் நிலையில், இங்குள்ள பள்ளிக்கூடங்களை தூய்மையாக வைத்திருக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளிக்கூடம் அருகிலேயே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும் கால்வாய் வசதியின்றி பள்ளி முன்பு கழிவுநீர் திறந்தவெளியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள், வகுப்பறைகளில் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆகவே முறையாக கால்வாய் அமைத்து, அதன் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நடவடிக்கை

மேலும் அந்த வார்டு பகுதி மக்கள் கூறுகையில், மாநகராட்சி மூலம் எங்கள் வார்டு பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மிகவும் பின்தங்கிய பகுதியாக எங்கள் வார்டு உள்ளது. புதைவட கேபிளுக்காக தெருக்களில் பள்ளம் தோண்டியதால் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளது. ஆனால் இதுவரை அதனை சீரமைக்கவில்லை. பல தெருக்களுக்குள் செல்ல முடியாதவாறு கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலங்கள் உடைந்துள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களை தவிர, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் பல தெருக்களுக்குள் செல்லவே முடிவதில்லை. மேலும் பள்ளி வாசல் தெரு முனை, சராங்கு தெரு முனைகளிலும், வீரபத்திரசாமி கோவில் தெருவிலும் மழைக்காலங்களில் தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதற்காக வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும். குப்பைகளை அள்ளிச்செல்ல துப்புரவு பணியாளர்கள் முறையாக வருவதில்லை. அதனால் கூடுதல் பணியாளர்களை நியமித்து, குப்பைகளை தினசரி அள்ளிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளும் பல இடங்களில் சேதமடைந்து போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. அதனை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story