பருவநிலை மாற்றத்தால் பூமியில் மோசமான வானிலை: இயற்கை பேரிடர் தாக்கும்போது மக்களின் பாதுகாவலனாக அரசு இருக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
இயற்கை பேரிடர் தாக்கும் சமயத்தில் மக்களின் பாதுகாவலனாக அரசு இருக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை பேரிடர் தாக்கும் சமயத்தில் மக்களின் பாதுகாவலனாக அரசு இருக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
புயலில் படகுகள் சேதம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகாவை சேர்ந்த செந்தில்குமார், தட்சிணாமூர்த்தி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018-ம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயலினால் எங்கள் படகுகள் சேதமடைந்தன. இதற்கு முறையே ரூ.17 ஆயிரம், ரூ.12 ஆயிரத்தை இழப்பீடாக அரசு வழங்கியது. இந்த தொகை போதுமானதல்ல.. எனவே எங்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர்களின் படகுகள் சிறிய அளவில்தான் சேதமடைந்து இருந்தன. அதற்கு ஏற்றார்போல இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டது என்றார்.
பாதுகாவலனாக அரசு
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் சர்ச்சை இல்லை. மீனவர்களான அவர்கள் தங்கள் வாழ்வை பறிகொடுத்துள்ளனர். தங்களின் படகுகளைத்தான் முழுமையாக நம்பியிருந்தனர். அந்த படகுகளின் சேதத்தை அதிகாரிகள் முறையாக மதிப்பிட்டார்களா? என்பது பரிசீலிக்க வேண்டிய கேள்வி. நிலையானதாக இல்லாமல், பருவநிலையானது மாற்றமடைந்து கொண்டே இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பூமி, மோசமான வானிலையை கொண்டுள்ளது.
புயல் போன்ற இயற்கை பேரிடர் நம்மை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். இத்தகைய நேரங்களில் மக்களின் பாதுகாவலனாக அரசு இருக்க வேண்டும். அந்த பொறுப்பில் இருந்து அரசு விலகிட முடியாது.
தலா ரூ.1½ லட்சம் இழப்பீடு
மனுதாரர்கள் விஷயத்தில் படகுகள் சேதமடைந்ததை முறையாக விசாரிக்கும் குழுவில் அதுதொடர்பான விவரங்களை அறிந்த அதிகாரிகள் இருந்திருக்க வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை கேட்டு, சேதமடைந்த பொருட்களை புகைப்படம் எடுப்பதுடன், இழப்பீடு போதவில்லை என பாதிக்கப்பட்டவர் கருத்து தெரிவித்தால் அதையும் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த கணக்கீடு வெறும் ஏட்டளவில்தான் உள்ளது. பொதுவான கணக்கீடு ஏற்புடையதல்ல.
எனவே மனுதாரர்களுக்கு தலா ரூ.1½ லட்சம் இழப்பீட்டை கணக்கிட்டு, ஏற்கனவே வழங்கிய தொகையை கழித்து மீதமுள்ள தொகையை 8 வாரத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.