பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை; திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு
நெல்லையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
நெல்லையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை
உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆடு மற்றும் மாடு குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகளுக்கு இறைச்சி தானமாக வழங்கப்பட்டது.
மேலப்பாளையம் ஜின்னா திடலில் நேற்று நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டு தொழுகையை நடத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். தொழுகையின்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், அங்கு கூடியிருந்த மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தார்.
த.மு.மு.க-எஸ்.டி.பி.ஐ.
மேலப்பாளையம் பஜார் திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையை மவுலவி அப்துல் முகைதீன் நடத்தினார். இதில் மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், துணைத் தலைவர் தேயிலை மைதீன், துணைச் செயலாளர் காஜா, இளைஞர் அணி துணைச்செயலாளர் ரியாசுரீரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மாநகராட்சி ஈத்கா திடலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. மாநில மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி, கிளை தலைவர் அஷ்ரப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கு பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பில் மேலப்பாளையம் கரீம்நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகை குறித்து பேசினார். இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா, ஜாபர் அலி, மீரான் முகைதீன், அன்வாரி, ஜெய்னுல் ஆப்தீன் எஸ்.டி.பி.ஐ. துணை தலைவர் கனி, பக்கீர் முகமது லெப்பை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன்
நெல்லை டவுன் தவ்ஹீத் ஜமாத் சார்பில் டவுண் லாலுகாபுரத்தில் தொழுகை நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சமீம் கப்பார், அப்துல் கரீம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகி டவுண் ஜாபர், மில்லத் இஸ்மாயில், சித்திக் நியமத்துல்லா, அன்வர், முகமது ஹனஸ்ராஜா உள்பட கலந்து கொண்டனர். மேலும் ஜாமியா பள்ளிவாசல், நயினார்குளம் பள்ளிவாசல், வி.எம்.பள்ளிவாசல், கட்டாக் பள்ளிவாசலிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதேபோன்று பேட்டை எம்.என்.பி பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில நிர்வாகி உஸ்மான்கான் கலந்து கொண்டார். மேலும் ஆர்.பி.பள்ளிவாசல், எம்.ஜி.பி.பள்ளிவாசல், நவாப் வாலாஜா பள்ளிவாசலிலும் பக்ாீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பாளையங்கோட்டை- களக்காடு
பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகே உள்ள சிந்தா மதார்ஷா தைக்கா ஈத்கா திடலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தலைவர் எம்.கே.எம். செய்யது அகமது கபீர், செயலாளர் எம்.கே.எம்.முகமது ஷாபி, பொருளாளர் அஷ்ரப் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காட்டில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கோட்டை ஜமாத், வியாசராஜபுரம் ஜமாத், கோவில்பத்து ஜமாத், சிங்கம் பத்து ஆகிய பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் ஷேக்முகைதீன், பீர் முகம்மது, ராசப்பா, அக்பர், களந்தை மீராசா, ஷேக் முகம்மது ஜமீன், ஆதம், யாசின், மதார் முகம்மது, நவ்பல், ரப்பி, நாசர், நஜிப் உசேன் உள்பட பலர் பங்கேற்றனர்.