பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை; ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
பக்ரீத் பண்டிகை
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 9 இடங்களில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது. அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுகை நடைபெற்றது.
அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். 6.30 மணிக்கு மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசர் தலைமை தாங்கி சிறப்பு தொழுகையை நடத்தினார்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் மற்றும் டவுன் கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், செய்ப்பு மைதீன், சம்சுதீன், செய்யது மசூது, துராப்ஷா ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் ஜாபர், அப்துல் அஜீஸ், மர்வான் தலைமையிலான தொண்டரணினர் செய்திருந்தனர்.
வாழ்த்து தெரிவித்தனர்
பேட்டை கிளை சார்பில் மர்க்கஸூந்நூர் தவ்ஹீத் திடலில் அஸ்கர், ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் செய்யது அலி, மக்காநகர் தவ்ஹீத் திடலில் ஹாமித், தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் தென்காசி அப்துல் அஜீஸ், பாத்திமா நகர் பள்ளி திடலில் சம்சுத்தீ, இக்பால் நகர் ரய்யான் திடலில் அப்துல் அஜீஸ், மஹ்மூதாநகர் தவ்ஹீத் திடலில் யாசிர், மதினா நகர் பள்ளி திடலில் அப்துல் ஸலாம் என நகரில் 9 இடங்களில் நடைபெற்றது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் அரவிந்த் மேற்பார்வையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
தொழுகைக்கு பின்பு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் மாடுகளை இறைவனுக்காக பலியிட்டனர். அதன் பின்னர் அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சங்கரன்கோவில்- புளியங்குடி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீராணம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உள்ளிட்ட பல்வேறு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 3 இடங்களில் பக்ரீத் பண்டிகை தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் சைபுல்லா ஹாஜா பைஜி தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார்.
இதேபோல் கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரி தலைமையிலும், மக்கா நகர் மஸ்ஜித் ஆயிஷா திடலில் ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையிலும் தொழுகை நடந்தது.
பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லா உமரி, தொழுகை நடத்தி குத்பா பிரசங்கம் செய்தார். தொழுகையில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் சேக் உதுமான், செயலர் முஹம்மது காசீம் என்ற சின்ஸா, பொருளாளர் அப்துல் மஜீத் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நேஷனல் தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் இக்பால் நகர் பேட்டை ரகுமானியாபுரம் பஜார் பகுதிகளில் தொழுகை நடத்தினர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் இக்பால் நகர், மதினா நகர், மெஹ்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தினர். பேட்டை காதர் காதர் முகைமைதீன் பெரிய குத்பா பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 3000 பேர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.