மீனாட்சி அம்மன் கோவில் 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலய பூஜை- இன்று நடக்கிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 5 கோபுரங்களுக்கு பாலாலய பூஜை இன்று நடக்கிறது. இதன் மூலம் கும்பாபிஷே திருப்பணிகள் தொடங்குகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 5 கோபுரங்களுக்கு பாலாலய பூஜை இன்று நடக்கிறது. இதன் மூலம் கும்பாபிஷே திருப்பணிகள் தொடங்குகின்றன.
கும்பாபிஷேகம்
கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகமவிதிப்படி வருகிற 2022-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் சுவாமி சன்னதி வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. அந்த மண்டபத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
எனவே மண்டபம் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி கும்பாபிஷேக பணிகளை தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பாலாலய பூஜை
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.25 கோடி மதிப்பில் மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் இந்த திருப்பணிகள், புனரமைப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகளில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கப்படுகின்றன. திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கோவிலில் உள்ள கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 9 நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் சன்னதி 7 நிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பாலாலய பூஜை நடக்கிறது.
யாக சாலைகள்
இதற்காக சுவாமி சன்னதி, 2-ம் பிரகாரம், நவக்கிரக சன்னதி அருகில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கின. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் பூஜை நிறைவு பெற்றது. மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரையிலும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை காலை 7 மணி முதல் 9 மணி வரையில் 2-ம் கால பூஜைகள் நடைபெறும்.
பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பாலாலய பூஜை நடைபெறும்.
உற்சவர் சுவாமி சன்னதியில்
இதுகுறித்து போலீஸ் ஸ்தானிக பட்டர் செந்தில் கூறும்போது. "மீனாட்சி அம்மன் கோவிலில் 5 கோபுரங்களுக்கு பாலாலயம் பூஜை இன்று நடக்கிறது. இதையொட்டி நவகிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக அங்கு 5 யாக குண்டம் அமைக்கப்பட்டு 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து புனித நீர் கலசங்கள் 2-ம் பிரகாரம் வலம் வந்து உற்சவர் சாமி சன்னதியில் கோலால பூஜைகள் நடக்கும். அப்போது அங்கு மாம்பலகையில் கோபுரங்களை வரைந்து வைத்து அதற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றி பாலாலயம் நடைபெறும். அதைத் தொடர்ந்து கோபுரங்கள் மராமத்து பணிகளை தொடங்கலாம்" என்றார்.