மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகளுக்காக 5 கோபுரங்களுக்கு பாலாலய பூஜை- அடுத்த மாதம் நடக்கிறது


மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகளுக்காக 5 கோபுரங்களுக்கு பாலாலய பூஜை- அடுத்த மாதம் நடக்கிறது
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகளுக்காக 5 கோபுரங்களுக்கு பாலாலய பூஜை அடுத்த மாதம் நடக்கிறது.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகளுக்காக 5 கோபுரங்களுக்கு பாலாலய பூஜை அடுத்த மாதம் நடக்கிறது.

கும்பாபிஷேகம்

கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகமவிதி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்படி கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீவிபத்தில் சுவாமி சன்னதி வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. அந்த மண்டபத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

எனவே மண்டப சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேக பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.25 கோடி மதிப்பில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் இந்த திருப்பணிகள், புனரமைப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகளில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

கோபுரங்களுக்கு பாலாலய பூஜை

அதன்படி தற்போது கோபுரத்தில் மராமத்து பணியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. எனவே திருப்பணிகள் மேற்கொள்ள உபயதாரர்கள் சிலர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு ராஜகோபுரங்கள் மற்றும் அம்மன் சன்னதி 7 நிலை கோபுரம் என 5 கோபுரங்களில் திருப்பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

அந்த திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பாலாலய பூஜை அடுத்த மாதம் (செப்டம்பர்) மாதம் 4-ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலாலய பூஜைக்கு பின்னர் கோபுர திருப்பணிகள் தொடங்கும்.

2026-ம் ஆண்டுக்குள்...

கோபுரங்களில் சாரம் கட்டுவதற்கு சுமார் 4 மாதம் ஆகும். அதன் பின்னர் சேதம் அடைந்த சிலைகள், கோபுரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சீரமைத்து, பெயிண்ட் அடித்து இந்த பணிகள் முடிவடைய சுமார் 2 ஆண்டு காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணிகளையும் விரைவுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த பணிகளும் 2 ஆண்டிற்குள் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. எனவே 2026-ம் ஆண்டுக்குள் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story