பெங்களூருவில் தக்காளியை திருடி தமிழ்நாட்டிற்கு வந்து விற்ற பலே தம்பதி...!


பெங்களூருவில் தக்காளியை திருடி தமிழ்நாட்டிற்கு வந்து விற்ற பலே தம்பதி...!
x
தினத்தந்தி 23 July 2023 10:24 AM IST (Updated: 23 July 2023 10:37 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் தக்காளி ஏற்றிச்சென்ற லாரியை கடத்திய தம்பதி, தமிழ்நாட்டிற்கு வந்து அதனை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் நகரிலிருந்து கோலார் சந்தைக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான சுமார் 2,000 கிலோ தக்காளியை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கடத்தப்பட்டிருக்கிறது. இந்த லாரியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ஒரு கட்டத்தில் லாரிக்கு முன்னால் சென்று திடீரென பிரேக் அடித்திருக்கின்றனர்.

இதனால் பின்னால் வந்த தக்காளி லாரி இவர்களது வாகனத்தில் மோதியுள்ளது. பின்னர் லாரியின் ஓட்டுநரை மிரட்டி கூகுள் பே மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பறித்திருக்கின்றனர். இது மட்டுமல்லாது ஓட்டுநரைத் தாக்கிவிட்டு தக்காளி லாரியையும் தங்களுடன் எடுத்து சென்றிருக்கின்றனர்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய ஆர்எம்சி யார்டு போலீசுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, லாரியை கடத்திய மர்மநபர்கள் அந்த லாரியை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். அங்கு வைத்து 2000 கிலோ தக்காளியையும் விற்றுத் தீர்த்திருக்கின்றனர். அதே வேகத்தில் பெங்களூர் திரும்பிய அவர்கள் எல்லையிலேயே வாகனத்தை விட்டுவிட்டு நம்பர் பிளேட் இல்லாத மற்றொரு வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இருப்பினும் முயற்சியைக் கைவிடாத போலீசார் தக்காளி கொள்ளையர்களான பாஸ்கர் மற்றும் அவரது மனைவி சிந்துஜா ஆகியோரை கைது செய்திருக்கின்றனர். இருப்பினும் இதில் மேலும் மூன்று பேர் ஈடுபட்டிருப்பதால் போலீஸ் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது.

தக்காளி திருடர்கள் மீது ஐபிசி 346ஏ, 392 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் பிரியாணி கடைகள் அதிகம் இருப்பதால் இந்த ஓட்டல்களுக்குத் தக்காளி விற்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்துக் கூறிய போலீசார்,

இதுபோன்று சம்பவம் நடந்தது குறித்து எங்களுக்குப் புகார் கிடைக்கப்பெற்றவுடன் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினோம். முதலில் டோல்கேட்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ய தொடங்கினோம். எதிர்பார்த்தபடி நாங்கள் கணித்த ரூட்டில்தான் லாரி சென்றிருந்தது.

தமிழ்நாட்டிற்கு வந்த பின்னர் லாரி எங்குச் சென்றது என்பது குறித்த எந்த தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. பின்னர் தமிழக போலீசின் உதவியை நாடி தக்காளி லாரியை கண்டுபிடிக்க முயன்றோம். இறுதியில் நாங்கள் குற்றவாளியைக் கைது செய்தோம்" என்று கூறியுள்ளனர்.


Next Story