வயலூர் முருகன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்
வயலூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.
திருச்சி சாரதாஸ் ஜவுளிக்கடை மற்றும் பணியாளர்கள் சார்பில் நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், வியாபாரம் தலைதோங்கி வணிகர்களும், பணியாளர்களும், பொதுமக்களும் நோயற்ற நல்வாழ்வு பெற வேண்டும் என வேண்டி வயலூர் முருகன் கோவிலுக்கு நேற்று பால்குடம், காவடி எடுத்துஊர்வலம் சென்றனர். 39-வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலை திருச்சி அய்யாளம்மன் படித்துறையில் காவிரி ஆற்றில் இருந்து முருகன் வள்ளி- தெய்வானை உடன் சிறப்பு அலங்காரம் செய்து பின்னர் 108 பணியாளர்கள் பால்குடம் எடுத்தும், 3 பெரிய காவடியும், 6 சின்ன காவடியும், ஒரு வேல் காவடியும் எடுத்துக்கொண்டு ஏராளமான பணியாளர்கள், பக்தர்கள் ஊர்வலமாக கரூர் பைபாஸ் ரோடு, சிந்தாமணி பஜார், ஆண்டார்தெரு, சின்னகடைவீதி வழியாக மலைக்கோட்டை நுழைவு வாயில் தாண்டி சாரதாஸ் ஜவுளிக்கடைக்கு முன்பு வந்தனர். அங்கு ஜவுளிக்கடை நிர்வாகத்தினர் ஊர்வலமாக வந்த அனைவருக்கு மரியாதை செய்தனர். பின்னர் தீபாராதனை செய்யப்பட்டு, மீண்டும் ஊர்வலமாக கோட்டை ஸ்டேஷன் ரோடு, தில்லைநகர், புத்தூர், வயலூர்ரோடு வழியாக ஊர்வலமாக வயலூர் முருகன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் மதியம் வயலூர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதற்காக போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.